இலங்கை தமிழர் மீது சேறு பூச சிலர் முயற்சி !

39

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்:

தமிழ் டயஸ் போராக்கள் பாரிய முதலீடுகளை இங்கு மேற்கொள்ள முன்வருவது மகிழ்ச்சியான விடயமாகும். ஆனால் அவர்கள் மீது சேறு பூச சிலர் முயல்வதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்ட இறுதி நாள் குழுநிலை விவாதத்தின் போது பதில் வழங்கி உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது.

வரவு செலவுத் திட்ட விவாதம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற இருந்தது. ஆனால் ஒக்டோபர் 26 ஆம் திகதி ஜனநாயக விரோத ஆட்சியின் காரணமாக பாரிய பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது.

2015 இல் இருந்து கட்டியெழுப்பப்பட்ட அடித்தளம் வெடித்துச் சிதறியது. 51 நாட்கள் ஜனநாயக விரோத ஆட்சியால் 57 பில்லியன் இழப்பு ஏற்பட்டது. ஆனால் கடந்த சில காலத்தினுள் 10 பில்லியன் டொலர் வெளிநாட்டு முதலீடுகளை பெற முடிந்தது.

வீழ்ச்சியடைந்திருந்த ரூபாவின் பெறுமதி உயர்ந்துள்ளதோடு இது 4.5 வீதத்தினால் ஸ்தீரமடைந்துள்ளது. சர்வதேச நாணய வகைப்படுத்தலில் முன்னேறியுள்ளது. 51 நாள் அரசு நீடித்திருந்தால் நாட்டின் நிலைமை எவ்வாறு இருக்கும் என நினைத்துப் பார்க்க முடியாது. இறக்குமதி பொருட்களுக்கான தேவையற்ற வரிகள் நீக்கப்பட்டுள்ளன.

புதிய நிதி சட்டமொன்றை சமர்ப்பிக்க இருக்கிறோம். மக்கள் நல திட்டங்களை மேலும் முன்வைக்க இருக்கிறோம். சமுர்த்தி நிவாரணத்தில் இருந்து அரசியலை அகற்ற இருக்கிறோம். வரவு செலவுத் திட்டம் தொடர்பில் பின்னூட்டம் மேற்கொள்ள இருக்கிறோம்.

இது ஐக்கிய தேசிய முன்னணி அரசின் முதலாவது வரவு செலவுத் திட்டமாகும். ஈ.டி.ஐ பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம். சிங்கப்பூர் நிறுவனம் 16 மில்லியன் டொலர் வழங்கியுள்ளதால் மொத்த தொகை 70 மில்லியனாக அதிகரித்துள்ளது.

புத்தாண்டிற்கு முன்னதாக தமது வைப்பில் 30 வீதத்தை வழங்க இருக்கிறோம். அவர்களின் வைப்பிற்கு தொடர்ந்து வட்டி வழங்கப்படும். லைக்கா மோபைல் நிறுவனம் குறித்து குற்றஞ்சாட்டப்பட்டது.

அவர் இலங்கையின் வர்த்தகர். அவர் இங்கு முதலிட முன்வந்துள்ள நிலையில் அவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகின்றனர். இது தவறாகும். தமிழ் டயஸ்போராக்கள் பாரிய முதலீடுகளை இங்கு மேற்கொள்ள விரும்புவது மகிழ்ச்சியான விடயமாகும்.

இந்த முதலீடுகளினால் சகல இன மக்களும் நன்மை அடைவர். முதலீடுகளுக்கு அனுமதி வழங்க முன்னர் சட்டங்கள், ஒழுங்குவிதிகள் என்பன குறித்து கவனம் செலுத்தப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here