டெல்லிக்கு பதிலடி கொடுக்குமா மும்பை அணி

35

ஐ.பி.எல். 12 தொடரின் 34 ஆவது போட்டியில் தனது சொந்த ஊரில் வைத்து டெல்லி அணி மும்பை அணியை எதிர்கொள்கின்றது. இந்நிலையில் டெல்லியின் தொடர் வெற்றிக்கு மும்பை அணி முற்றுப்புள்ளி வைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான போட்டி இன்று இரவு 8 மணிக்கு டெல்லியில் இடம்பெறவுள்ளது.

இம் முறை இடம்பெற்றுவரும் ஐ.பி.எல். போட்டியில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் ஒரே மாதிரியாக 8 போட்டிகளில் விளையாடி தலா 5 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதுடன் 3 போட்டிகளில் தோல்வியடைந்து இரு அணிகளும் 10 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன.

டெல்லி கெபிட்டல்ஸ் அணிக்கு ஸ்ரேயாஸ் அய்யர் தலைமைதாங்கும் அதேவேளை, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா தலைமை தாங்குகின்றார்.

இதுவரை இரு அணிகளும் நேருக்குநேர் 23 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் டெல்லி அணி 12 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதுடன் மும்பை அணி 11 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.

இளமையும், அனுபவமும் கொண்ட டெல்லி அணி தனது இறுதி 3 போட்டிகளிலும் வரிசையாக வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

இதே போல் மும்பை அணி முந்தைய போட்டியில் பெங்களூருவை தோற்கடித்து இருந்தது. அதே உத்வேகத்துடன் இரு அணிகளும் இன்றைய போட்டியில் களமிறங்குவதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு குறைவிருக்காது.

இவ்விரு அணிகளும் ஏற்கனவே மும்பையில் சந்தித்த போட்டியில், டெல்லி அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பையை தோற்கடித்தது.

இதில் ரிஷாப் பான்ட் 27 பந்தில் 78 ஓட்டங்களை விளாசி பிரமாதப்படுத்தினார். அந்த தோல்விக்கு பழிதீர்க்க மும்பை அணி தீவிரம் காட்டும்.

இந்நிலையில் இன்றைய போட்டி இடம்பெறும் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானம் மெதுவான தன்மை கொண்டது. அதனால் சுழற்பந்து வீச்சு முக்கிய பங்கு வகிக்கும். பொறுத்திருந்து பார்ப்போம் டெல்லியின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்குமா மும்பையென்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here