சென்று வா மகேந்திரா! – கண்ணீருடன் விடை கொடுக்கும் திரையுலக பிரபலங்கள்

105

பழம்பெரும் திரைப்பட இயக்குநர் சி. மகேந்திரன் காலமானார். அவருக்கு வயது 79. தமிழ்த் திரையுலகில் தனக்கென முத்திரை பதித்தவர் இயக்குநர் மகேந்திரன்.

ரஜினியின் திரைப்பட வரலாற்றில் மைல் கல்லாக விளங்கிய முள்ளும் மலரும், ஜானி, கை கொடுக்கும் கை போன்ற படங்களை இயக்கியவர் இயக்குநர் மகேந்திரன்.

எவ்வித ஆரவாரமும் இன்றி எடுக்கப்பட்ட இவரது படங்கள் பெரும்பாலும் ஆகச்சிறந்த திரைப்படங்களாகவே இருந்தன.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பிறந்த மகேந்திரன், எம்.ஜி.ஆரின் அழைப்பின் பேரில் சென்னைக்கு வந்து திரைத்துறையில் பணியாற்றினார்.

12 படங்களை இயக்கிய சி. மகேந்திரன் தங்கப்பதக்கம், காளி, ஹிட்லர் உமாநாத் என தமிழ், தெலுங்கில் 26 படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார்.

தெறி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மகேந்திரன், பேட்ட, நிமிர் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

உடல்நலக்குறைவால் கடந்த வாரம் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மகேந்திரன் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மகேந்திரனின் உடலுக்கு இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெறும் என்று அவரது மகன் ஜான் மகேந்திரன் தெரிவித்தார்.

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள மகேந்திரனின் உடலுக்கு திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இயக்குநர்கள் அகத்தியன், சிம்புதேவன், நடிகைகள் ரேவதி, ராதிகா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், வாழ்நாள் முழுவதும் எளிமைக்கு இலக்கணமாக விளங்கிய இயக்குநர் மகேந்திரன், யதார்த்த சினிமா இயக்குநர் என்று திரையுலகில் இமயத்திற்கு நிகரான பெயரைப் பெற்றவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

இளம் இயக்குநர்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த உதாரணமாகவும், எதிர்காலத் தலைமுறையினருக்கு வழிகாட்டியாவும் திகழ்ந்த மகேந்திரன், தமிழ் திரைப்படத்துறைக்கு பெருமை சேர்த்தவர் என்று என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு இயக்குநர் பாரதிராஜா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர்கள் சந்தானபாரதி, மணிரத்னம், நடிகைகள், அர்ச்சனா, சுஹாசினி, நடிகர்கள் மோகன், கருணாகரன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here